
நினைத்தாலே இனிக்கும் பள்ளி பருவ நினைவுகள்
நினைத்தாலே இனிக்கும் பள்ளி பருவ நினைவுகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும், எல்லாவற்றிலும் பள்ளி காலத்தின் போது ஏற்பட்ட அனுபவம் தான் இனிமையானதாக இருக்கும். அதே போல் தான் எனக்கும்…. புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவியாக இருந்த அந்த பசுமையான நாட்களை எவ்வளவு காலம் சென்றாலும் மறக்கமுடியாது. பள்ளி வாழ்க்கையில் ஏற்படுகின்ற சின்னச் சின்ன சந்தோஷங்கள், நல்ல நட்புகள், ஏமாற்றங்கள், நகைச்சுவையான சம்பவங்கள், துக்கங்கள் எல்லாம் அந்த வயதில் எம்மை ஒரு பக்குவ நிலைக்கு இட்டுச் சென்ற இருக்கும் அல்லவா ?
அந்தவகையில் நான் என்னுடைய ஆறாவது வயதில் எனது பாடசாலையான புனித பத்திரிசியார் கல்லூரியில் முதலாம் தரத்தில் காலடி எடுத்து வைத்தேன். என்னையும் எனது நண்பர்களையும் இன்முகத்துடனும் அன்புடனும் எமது பாடசாலை அதிபராக இருந்த அருட்சகோதரி ஜூலியா அவர்களும் முதலாம் வகுப்பு ஆசிரியையாக இருந்த திருமதி. சுதர்ஷினி ஆசிரியை அவர்களும் வரவேற்றனர்.
வாழ்வில் ஒரு புது அத்தியாயம் ஆரம்பமானது எனக்கூறலாம். ஆனாலும் பழக்கப்பட்ட ஆசிரியர்களின் முகங்கள், பாலர் பாடசாலையில் ஒன்றாகப் படித்த அதே நண்பர்கள்….! மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
“ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிஷமாக நெஞ்சில் புதைத்த – நினைவுகள்
எல்லாம் ஞாபகம் வருதே… “
மறக்க முடியவில்லை எங்களுடைய பழைய பாடசாலை கட்டிடத்தை. ஒவ்வொரு வகுப்புக்கும் வகுப்பேற்றம் அடைந்து செல்கையில் புதிய ஆசான்கள், மேலும் சில புதிய நண்பர்கள்… அருமையான காலம்.
என்னுடைய ஆசான்களை என்னை செதுக்கிய தலைசிறந்த சிற்பிகள் என்று கூறினால் மிகையாகாது. என் பெற்றோர்களால் வடிவமில்லா ஒரு கல்லாக ஒப்படைக்கப்பட்ட என்னை எல்லோரும் வியக்கும் வண்ணம் செதுக்கிய அழகு நிறைந்த சிற்பமாகிய பெருமை என்னுடைய ஆசிரிய சிற்ப்பிகளையே சாரும்.
பயம்! ஒருநாள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்றால் மறுநாள் பாடசாலைக்கு செல்ல மிகவும் பயமாக இருக்கும். காரணம் யாதெனில், பெரிய கொடிய பிரம்புடன் எம்முடைய பாடசாலை அதிபர் அருட்சகோதரி கலாசியோனா அவர்களும், அருட்சகோதரி ஜஸ்டஸ் அவர்களும் பாடசாலைகளில் வாயிலில் நின்று கொண்டிருப்பார்கள். பொய்யான காரணங்களுக்காக பல சமூக பணிகளை அவர்கள் எப்போதும் கண்டிக்க தவறுவது தவறியதே இல்லை
தரம் 1 தொடக்கம் 5 வரை தங்களுடைய பழைய பாடசாலை கட்டிடத்திலேயே பயின்றோம். 2003ம் ஆண்டு நாங்கள் அனைவரும் இப்போது படிக்கும் புதிய பாடசாலை கட்டிடத்திற்கு சென்றோம். அந்த புதிய பாடசாலை கட்டிடம் அருட்சகோதரி கலாசியோனா அவர்கள் பாடசாலை அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே கட்டப்பட்டு மிகவும் கோலாகலமாக திறக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் இரண்டு மாடி கட்டிடமாக இருந்தது.
நாங்கள் கற்பதற்கான போதிய அளவு வசதிகள் அப்பாடசாலையில் இருந்தது. அதுமட்டுமல்லாது எங்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. இதனால் எமது பாடசாலை கூறிய பேரும் புகழும் அதிகரிக்கத் துவங்கியது. அதேபோல் நாமும் வளர்ந்து கொண்டே செல்ல, எமக்கான ஏட்டுக்கல்வியும் அனுபவ கல்வியும் வளர்ந்து கொண்டே செல்லாயிற்று.
எம்முடைய ஒன்பதாவது தரத்தில் எமது பாடசாலைக்கு புதிய அதிபராக அருட்தந்தை மேரியன் லெனார்ட் அவர்கள் பதவியேற்றார். அதிபர் அவர்கள் தன்னுடைய ஒரு வருட சேவையின் போது எமது பாடசாலையின் மூன்றாவது மாடி கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.
நாம் அனைவருக்கும் சிறந்த ஒரு விடயம் யாதெனில் பாடசாலை மாணவ தலைவர்கள். இதனை தெரிவு செய்கையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், நன்னடத்தை, அதிபர் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையளித்தல், முதலான சிறப்பு பண்புகளில் சிறந்தவர்களை தெரிவுசெய்வது வழக்கம். அதேபோல் நானும் எம்முடைய பாடசாலை முன்னாள் அதிபராலும் ஆசிரியர்களாலும் தெரிவுசெய்யப்பட்டட பாடசாலை மாணவ தலைவர்களுள் நானும் ஒருவர் என்று கூறுகையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு வருட காலப் பகுதிகள் பாடசாலையின் மாணவர் தலைவர் என்ற ரீதியில் எனக்காக ஒப்படைக்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்து கொண்டிருக்கையில் எமது பாடசாலையை விட்டு பிரிந்து செல்லும் காலமும் நெருங்கியது. ஆம்! எம்முடைய சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கான காலமும் நெருங்கியது.
கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாதவராய் நாங்கள் பாடசாலையில் இருந்து விடைபெற்றுக் கொண்டோம். மீண்டும் கிடைக்கப்பெறாத நினைத்தாலே இனிக்கும் பள்ளிப்பருவ நினைவுகளுடன் எமது பாடசாலையை விட்டு பிரிந்து சென்ற அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நீர் மழ்கச் செய்கிறது.
“மறக்க முடியாத நினைவுகள் துறக்க விரும்பாத சுகமான சுமைகளாக என்றும் என் மனதில் பள்ளிக்காலம்! வசந்தகால நினைவுகளை புரட்டிப் பார்த்த வண்ணம் எமது பாடசாலை தாய்க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் எமது பாடசாலையான புனித பத்திரிசியார் கல்லூரி மேலும் பல சிறப்பான பெயருடனும் புகழுடனும் வளர வாழ்த்தி என்னுடைய பள்ளிப்பருவ நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்’
“எங்கேயோ தோன்றி
எங்கேயோ வாழ்ந்த – எங்களை
ஒன்றாய் சேர்த்த
கல்லூரிக்கு
நன்றி சொல்கிறோம்”