
என்னை செதுக்கிய தாயுமானவள்.
என்னை செதுக்கிய தாயுமானவள்.
தாயின் கருவறைக்குள் மாத்திரம் துவண்ட நான், கல்லூரி தாயின் வகுப்பறைக்கு சென்ற நாள் அது.நான் அதுவரை அந்த இடத்தை பார்த்ததே இல்லை.
இறைவன் தான் படைத்த இயற்கைக்கு கொடுத்த பரிசான பச்சை நிறத்தினுள் மறைந்திருந்தது, மாண்புறு புனித பத்திரிசியார் கல்லூரி. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தாலும் அவனிடம் பணிவு என்ற பண்பு இல்லையென்றால் அவன் அடைந்த உச்சம் போலியானது என்பதை சுட்டிகாட்டி கற்றுத்தருவதை போல் தலைவணங்கி என்னை வரவேற்ற அங்கிருந்த மூங்கில்களே நான் கண்ட முதல் ஆசான்கள்.
அந்த கல்லூரியில் காலூன்றியவர்கள் எல்லாம் சமூகத்தில் சிறந்ததோர் நிலையில் இருந்ததால்,
எனது பெற்றோர்களின் ஆசைப்படி அக்கல்லூரியில் நானும் ஒரு மாணவனானேன்.
அவ்வாறாக கல்வியின் முதல் அத்தியாயத்தில் காலூன்றி , எங்கு பயணிக்க போகின்றோம் என அறியாமலேயே பயணிக்க ஆரம்பித்தேன். இறைவன் “அன்பு” எனும் சொல்லுக்கு உருக்கொடுத்து அவளை என் வகுப்பாசிரியராக அக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தமைக்கு இந்நாள் வரை இறைவனுக்கு நான் நன்றி கூறியதில்லை.
காலமும் நேரமும் சக்கரங்கள் போல சுழன்றுக்கொண்டிருக்க, ஆசிரியரொருவர், “உனது இலட்சியம் என்ன?” வென்று கேட்கவே, வைத்தியர், விஞ்ஞானி,பொறியியலாளன். என வருடம் வருடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்டவன் நான்.
கல்லூரியில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப்போட்டிகளில் கூட என்னுடைய பங்கு குறைவாகவே காணப்பட்டது. விளையாட்டில் கூட எனக்கு அவ்வளவான ஆர்வம் இல்லாத நிலை. ஆசிரியர்களாக முன்வந்து வாய்ப்புக்களை அளித்தாலும் திருடி பிடிப்பட்ட கள்வன் போல் மெதுவாய் தப்பித்துக்கொள்வேன்.
எனக்கு என் மேல் துளியளவு கூட நம்பிக்கை இருந்ததில்லை. நான் பயனற்றவன் என என்னை நானே நினைத்து கலங்கிய நாட்கள் கண் முன் நீந்திச் செல்கின்றன.
கல்லூரி அதிபர், அந்த நிகழ்ச்சி திட்டத்தை கல்லூரிக்கு வரவேற்கும் வரும் வரை வாழ்வில் எனக்கென்ற ஓர் இலட்சியம் இருந்ததில்லை. ஒளியற்ற வானம் போல் இருள் சூழ இருந்த என் வாழ்கையில் கதிரவனொருவனின் ஒளி தெரிவதை கண்டேன்.
இலங்கையின் முதல் தர வானொலி நிறுவனமொன்றினால் நடாத்தப்பட்ட, வானொலி தொடர்பான அறிவை மாணவர்களுக்கு தெரியப்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சியே அது. அந்நாள்வரை ஆர்வமின்றி பாடசாலைக்கு சமூகமளித்த நான்,
அந்நாள்வரை நானே கண்டிராத ஆர்வத்துடன் என்னை நானே தூக்கிச்சென்று அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்துக்கொண்டேன். வானோலியொன்று எவ்வாறான முறையில் இயங்குகின்றது ? அறிவிப்பாளர் என்பவன் யார்? என்பதை போன்ற பல விடயங்களை தெரிந்து கொண்ட என்னுள் ஊடகம்,கலைத்துறைக்கான இலட்சிய விதையை தூவி என்னை மீண்டெளச் செய்தது என் கல்லூரி.
முதன்முறையாக கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சந்தை, கல்லூரி மைதானத்தில் நடந்தேறிக்கொண்டிருக்க, மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தடதடவென மேடையில் ஏறி ஓய்வின்றி கிடந்த ஒலிவாங்கியை பிடுங்கி ஓரிரு வார்த்தைகளை பேசி தள்ளிவிட்டேன். எனக்குள்ளும் ஓர் குரல்வளம் இருந்ததை, மேடை இறங்கும் போது எனக்கு கிடைத்த பாராட்டுக்களின் மூலம் தெரிந்துக்கொண்டு, கல்லூரியின் ஆசிரியர் தினம், விளையாட்டுப்போட்டி , நடைபவணி போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் என் குரலை அனைவருக்கும் ஒலிபெருக்கியில் கேட்கவைத்து விடுவேன். கல்லூரியில் மட்டுமன்றி வேறுவெளியிடங்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளனாக மாறினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னும் எனக்கு பரிசாய் கிடைத்த பாராட்டுக்கள் எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற சொத்துக்களாகும் அதை விட பெரிய சொத்தை இதுவரை நான் கண்டதில்லை .
அதுவரை கதைகள் வாசித்த எனக்குள் கதை எழுதும் திறன் இருப்பதை அறிந்த தமிழ்பாட ஆசிரியரின் தூண்டுதலால், வாழ்க்கையின் முதல்முறையாக சிறுகதை போட்டி ஒன்றுக்கு தெரிவாகி சான்றிதலொன்றை பெற்றுக்கொண்டேன்.அதன் பிறகு “நிஜமும் நிழலும்” என்று கல்லூரியால் ஒழுங்குசெய்யப்பட்ட வீதிநாடகத்தில் பங்கேற்கவே நடிப்பின் மீதும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
எனக்குள் இருந்த ஒவ்வொரு திறமையையும் கண்டுப்பிடித்து என் கையில் தந்துக்கொண்டிருந்தது என் கல்லூரி. நீண்டநாள் குறுந்திரைப்பமொன்றை எடுத்திட வேண்டும் என்ற கனவு என்னை ஆட்கொள்ளவே, அதிபரிடம் தயங்கி தயங்கி அனுமதியொன்றை நானும் நண்பர்களும் கேட்க, மாணவர்களின் திறமைக்கு தீனியிடும் அவருக்கு அதனை மறுக்க இயலவில்லை. உடனடியாக ஒத்துக்கொண்டார். அது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் அதைப்பற்றிய சரியான அறிவு எங்களிடம் இருந்திருக்கவில்லை என்றாலும் கல்லூரி எங்களை பாராட்ட தவறவில்லை. அதன் பிறகாக கல்லூரி இல்ல விளையாட்டு போட்டியில் மலையக விளையாட்டினையும், வீரர்களையும் பிரதிநிதித்துவ படுத்தியதான “மண்வாசம்” பாடலுக்கும் கல்லூரி பாராட்டவும் , வாய்ப்பளிக்கவும் தவறவில்லை.
ஏன் பயணிக்கின்றோம் என்று தெரியாமல் என் பயணத்தை தொடர்ந்த நான் , இன்று சாதிக்க துடிக்கின்றேன்.என்னிடமெல்லாம் என்ன திறமை இருந்துவிட போகின்றது என்று கலங்கிய கண்ணீரை துடைத்த என் கையில் ஆயிரம் திறமைகளை கண்டுபிடித்து தந்திருக்கின்றது என் கல்லூரி. கனவுகள் அற்று கானல் நீர் போன்று தொலைவில் மட்டும் ஒளிந்து தெரிந்த என்னை கடல்நீர் போன்று விசாலமாய் தெரிய வைத்தது என் கல்லூரி.
என்னை மட்டுமல்ல கல்லூரி தாயில் மடியில் தவழவரும் அனைத்து கற்களையும் தன் அரவணைப்பினால் செதுக்கி சமூகத்தின் சிறந்த சிற்பமாக உருமாற்றி பெருமையடைவாள் என்னை செதுக்கிய தாயுமானவள்.
கல்லூரியின் மடியில் தவழ்ந்து , கல்லூரியினால் செதுக்கப்பட்டு , இலட்சியத்திற்காக போராடும் ,கல்லூரியின் மாணவன்.
✍ விபி.வினோஷன். ( A/L 2021 )